"கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் முறைகேடு" - ஸ்டாலின் அரசை சாடும் ஈபிஎஸ்

 
eps

கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கடந்த இரண்டு மாதங்களாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக ஆண்டுக்கு சுமார் 12,000 யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப்படும் என்று கூறி குவாரி நடத்த அனுமதி பெற்றவர்கள் , அந்த வருடத்திற்கான மொத்த உற்பத்தியை 12 மாதங்களுக்கு சமமாகப் பிரித்து மாதத்திற்கு ஆயிரம் யூனிட் சதவீதம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று புதிய விதியினை உதவி இயக்குனர் மூலமாக தமிழக அரசு தங்கள் மீது திணிப்பதாகக  கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

eps

மேலும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த பர்மிட் முறை தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஜல்லி உற்பத்தியாளர்கள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது . தேவையான அனுமதியை பெற ஒருநாள் முழுமையாக செலவாகிறது என்று ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.  இதனால் மூன்று நாட்களுக்கு பர்மிட் வாங்கினாலும் மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு மட்டுமே கட்டுமான பணிகளுக்கு ஜல்லியை உற்பத்தி செய்யவும் வாகனங்களில் கொண்டு செல்லவும் இயலும் இவ்வாறு முறைப்படி கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி வாங்கி உற்பத்தி செய்பவர்கள் இந்த அரசு இவ்வாறு கெடுபிடிகள் செய்கிறது.

EPS

50 சதவிகிதத்துக்கு மேல் காலாவதியான கல்குவாரிகள் எந்தவிதமான பர்மிட்டும் இல்லாமல்  கவனிக்க வேண்டிய ஆளும் கட்சியினரை கவனித்துவிட்டு,  ஜல்லி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர் . இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் முழுவதும் எங்கே போகிறது என்று நான் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. கரூர் ,புதுக்கோட்டை, விருதுநகர் ,தேனி, திண்டுக்கல் போன்ற ஒரு சில மாவட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகிறது என்று கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

eps

மேலும் இதுபோன்று விதிகளுக்குப் புறம்பாக கல் குவாரிகள் நடத்துபவர்கள் விதிகளின் படி செயல்படும் குவாரிகள் , விதிகளை மீறி செயல்படுகிறார்கள் என்று அரசுக்கு மொட்ட பெட்டிஷன் போட்டு தேவையின்றி மூடு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கல்குவாரி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்த அரசு உடனடியாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை பர்மிட் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையை மாற்றி பழையபடி 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ பர்மிட் வழங்க வேண்டும் என்றும் குவாரிகளில் எந்தவிதமான பர்மிட்டும்  பெறாமல் ஜல்லி உற்பத்தி செய்து விற்பனை செய்வதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக அரசில் எப்படி கல் குவாரிகளில் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்று அடைந்ததோ,  அதன்படி இப்போதும் கல்குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தில் சென்றடைவதை இந்த விடியா  அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.