பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.90 ஆகவும், டீசல் விலை ரூ.95.47 ஆகவும், இயற்கை எரிவாயு விலை ரூ.91.50 ஆகவும் உயர்ந்து உள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட பல நகரங்களிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக காய்கறி, உணவுப் பொருட்கள், பால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அமெரிக்கா - ஈரான் மோதல் காரணமாக ஹோர்மஸ் நீரிணை மூடப்பட்டு உள்ளதால் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, அதன் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டாலும், ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மிகவும் அதிகமாக உள்ள நிலையில், இந்த சுமையை பொதுமக்கள் மீது சுமத்தாமல் மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது வருத்தம் அளிக்கிறது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகளை கடுமையாக பாதிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். எனவே பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

