போட்டியில் தோற்ற மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்
சேலத்தில் போட்டியில் தோற்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் எட்டி உதைத்த காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூரில் உள்ள நிர்மலா அரசு உதவி பெறும் பள்ளியில் கூடைப்பந்து போட்டியில் தோற்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஷூ காலால் எட்டி உதைத்து சித்திரவதை செய்தார். மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மாணவர்களை ஷூ காளால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது... pic.twitter.com/v4GL3CV2UN
— Praveen Kumar G.L🧡💚 (@praveen_kgl) August 11, 2024
விசாரணையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இறுதிச்சுற்றில் நிர்மலா பள்ளியும், ஜி.வி தனியார் பள்ளியும் விளையாடின. முதல் சுற்றில் நிர்மலா பள்ளி மாணவர்கள் சரியாக விளையாடவில்லை என ஆத்திரமடைந்து, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, விளையாட்டு இடைவெளியின்போது மாணவர்களை தரையில் அமரவைத்து, “நீ என்ன மனுசனா... பொம்பளையா?. ஏன்டா கால் வராதவனே... உங்களுக்கு என்னடா ஆச்சு?” என கடும் வார்த்தைகளால் திட்டியதுடன் ஷூ காலால் எட்டி உதைத்து கன்னத்தில் அறைந்தது தெரியவந்தது.
வீடியோ வைரலானதை அடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.