சுதந்திர தினத்தை பிரதமர் மோடி அவமதித்துள்ளார் - பினராயி விஜயன்..!

 
1 1

சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு புகழாரம் சூட்டி, சுதந்திர தினத்தை பிரதமர் மோடி அவமதித்துள்ளார் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஒரு வலதுசாரி அமைப்பிற்கு சுதந்திர போராட்டத்தின் பெருமையை உரிமையாக்கும் முயற்சியாக, பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்ந்துரைத்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்வதற்கு சுதந்திர தின உரையை பிரதமர் பயன்படுத்துவது சுதந்திர தினத்தையே அவமதிப்பதற்கு சமம்.

மோடியின் நடவடிக்கை வரலாற்றை மறுக்கும் செயலாகும். இதுபோன்ற அபத்தமான நடவடிக்கைகள் மூலம் ‘பிளவுபடுத்தும் அரசியல்’ என்ற விஷ வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்களை மூடிமறைக்க முடியாது.

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்ந்துரைப்பதும், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் சுதந்திர தின வாழ்த்து அட்டையில் மகாத்மா காந்தியின் படத்திற்கு மேல் சாவர்க்கரின் படத்தை இடம்பெற வைப்பதும் பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதைக் காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெறுப்பு, வகுப்புவாதம் மற்றும் கலவரங்களின் அழுக்கு சுமையை சுமந்து கொண்டிருக்கிறது. மனித அன்பு மற்றும் பரஸ்பர உறவின் வரலாற்றைப் புதைத்து, அதை வெறுப்பாக மாற்ற முயற்சிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.