குன்னூர் பேருந்து விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் - தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

 
pm modi

குன்னூரில் சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார், பேருந்து கவிழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குன்னூர் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 


இந்த நிலையில், குன்னூர் பேருந்து விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உதவித் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுகு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.