வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

 
MS Swaminathan

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 98. எம்.எஸ் சுவாமிநாதன் என்று அழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் கும்பகோணத்தில் பிறந்தவர்.  பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.  அத்துடன்  தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று உயிரிழந்தார். வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11.20க்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் உயிர் பிரிந்தது.  


 

இந்த நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது மற்றும் நமது தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது.
விவசாயத்தில் அவர் ஆற்றிய புரட்சிகரப் பங்களிப்புகளுக்கு அப்பால், டாக்டர் சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். 

ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது. டாக்டர் சுவாமிநாதனுடனான எனது உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இந்தியா முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்மாதிரியாக இருந்தது. அவரது வாழ்க்கையும் பணியும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.