மது பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்- அன்புமணி ராமதாஸ்
மதுவுக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் பா.ம.க ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “வெளிநாட்டில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக செய்திகள் வெளிவருவது உண்மை இல்லை, முதல்வர் பொய் சொல்கிறார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏற்புடையதல்ல. இதனால் மாணவர்களுடைய கல்விதான் பாதிக்கும். மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளதாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளா. மதுவுக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் பாமக ஆதரவு தெரிவிக்கும். திமுகவும் அதிமுகவும் மதுவை திணிக்கிறது. மதுவால் மூன்று தலைமுறைகள் அழிந்து விட்டன. கட்சி, சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்டவை பார்க்காமல் அனைவரும் சேர்ந்து மதுவை ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும், வருங்கால தலைமுறையை காப்பாற்ற வேண்டும். மது பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம். 10 வருடம் திமுக கூட்டணியில் இருந்துள்ள திருமாவளவனும் தற்போது மது ஒழிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழக அரசு சாராயத்தில் கவனம் செலுத்தாமல் ஏரிகளை பாதுகாக்க வேண்டும்.
பாஜக கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடிக்கிறது. கொள்கை வேறு கூட்டணி வேறு. தமிழகத்தில் மது கஞ்சா போதை பொருட்கள் அதிகரித்துவிட்டன. இதனால் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டது. ஆறு கொலைகள் நடந்திருப்பது குறித்து டிஜிபி விளக்கம் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. பள்ளியில் மகாவிஷ்ணு மூடநம்பிக்கை பிற்போக்கு சிந்தனை குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அதற்கு தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனி பள்ளிகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.