"2026ல் கூட்டணி ஆட்சி நடக்கும்; ஆட்சி அதிகார பகிர்வு இருக்கும்"- அன்புமணி ராமதாஸ்
கடலூரில் விசிக- பாமக மோதிக் கொள்ளும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு சுமூக பேச்சை வார்த்தையில் ஈடுபட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
சோளிங்கர் பகுதியில் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அமைப்பு செயலாளர் மகள் திருமணத்திற்கு கலந்து கொண்டு அவர்களை ஆசீர்வதித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், “கடலூர் பகுதியில் விசிக-பாமக இடையே நடைபெற்று வரும் மோதலில் காவல்துறை ஒரு தலை பட்சமாகவே செயல்படுகிறது. மேலும் வன்னிய சங்கத்தின் மாநிலத் தலைவரை பொது கூட்டத்தில் ஒருவர் தலையை வெட்டி விடுவேன் என்று சொன்னால் கூட அவர் மீது மூன்று நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாமகவை சேர்ந்தவர்கள் மீது மட்டும் காவல்துறை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதுகுறித்து தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இந்த விவகாரத்தில் சுமூக முடிவை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. அதை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பாமக சார்பில் வெகுவிரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அப்பொழுது முடிவு செய்யப்படும். ஆனால் 2026ல் கூட்டணி ஆட்சி நடக்கும், ஆட்சி அதிகார பகிர்வு இருக்கும்” என்றார்.