வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் அடுத்த தேர்தலில் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் வசிக்கும் வன்னியர் இன மக்களுக்கு கல்வி, மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கமும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 10.5% சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டது. இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்து 1000 நாட்களை கடந்தும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்திருந்தார். அதன்படி காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட் பகுதியில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொன்னால் எங்களுக்கு அதிகாரம் கிடையாது என கூறும் திமுக அரசு தூங்கவில்லை, தூங்குவது போல் நடிக்கிறது. 2018 சட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் கணக்கெடுப்பு நடத்தலாம். ஊராட்சி மன்ற தலைவர் இருக்க அதிகாரம் உள்ளபோது முதலமைச்சருக்கு அதிகாரம் கிடையாதா? சமூக நீதியை பற்றி பேசும் திமுக அங்கம் வகிக்கும் அரசில் மூத்த அமைச்சர் துரைமுருகன் இருக்க அவருக்கு துணை முதல்வர் பதவி வன்னியர் என்பதால் மறுக்கப்பட்டிருக்கிறது. ஏ.வா வேலுவிற்கும் சமூக நீதிக்கு சம்பந்தம் இருக்கிறதா? தியாகி செந்தில் பாலாஜிக்கும் சமூக நீதிக்கும் சம்மந்தம் இருக்கிறதா? இப்படி ஒரு முதலமைச்சரை நாங்கள் பார்த்தது கிடையாது. துறை செயலாளர்கள் ஒருவர் கூட வன்னியருக்கு ஒதுக்கப்படவில்லை.

116 சமுதாயங்களுக்கு 20 இட ஒதுக்கீடு வழங்கும் போது ஒரு சமூகத்திற்கு மட்டுமே 10.5 சதவிகிதம் வழங்குகிறீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்விக்கேட்டது. இதற்கு சரியான பதிலை தமிழக அரசு அளிக்கவில்லை. 49 ஆண்டுகளாக அம்பேத்கர் குறித்து திமுகவினர் பேசினார்களா? தமிழ்நாட்டில் ஏழு அம்பேத்கர் சிலைகளை திறந்தவர் மருத்துவர் ராமதாஸ். வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம், அப்படி கொடுக்கவில்லை என்றால் வீடு வீடாக சென்று ஸ்டாலின், வன்னியர்களுக்கு விரோதி என பிரச்சாரம் செய்வோம். அதன் பிறகு மானமுள்ள எந்த வன்னியனும் திமுகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டான். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


