டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒரு சென்ட் இடத்தை கூட எடுக்க விடமாட்டோம்- அன்புமணி ராமதாஸ்
டங்ஸ்டன் கனிம சுரங்கம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசால் பல்லுயிர் வாழும் பாதுகாக்கும் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி கிராமத்தைச் சுற்றி சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அரிட்டாபட்டி கிராமத்திற்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடையே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், “டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் வாழ்க்கை தரம் வெகுவாக பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் ஒரு சென்ட் நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது மட்டும் அல்லாமல் அடுத்து வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்றி, இத்திட்டத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒன்றிய அரசு அறிவித்துள்ள மறு ஆய்வு என்பது மக்களை ஏமாற்றும் செயல்” என்றார்.


