பாமக மாநாடு நடத்த உதவிய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு நன்றி- அன்புமணி ராமதாஸ்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று திருவிடந்தை மாநாட்டு திடலுக்கு வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “நேற்று மாலை மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிராமத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. சமீப காலத்தில் தமிழ்நாட்டில் இப்படி ஒரு மாநாடு நடைபெறவில்லை என அனைத்து பொதுமக்களும் அனைத்து கட்சியினரும் பேசிக்கொண்டார்கள். அந்த வகையில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிகரமாக நடத்திய அனைத்து நிலை நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்தினர். இந்த மாநாட்டில் பல மாநிலம் பல நாடுகளில் இருந்தும் கலந்துக்கொண்டனர். மாநாட்டிற்கு பிறகு இந்த திடலை சுத்தம் செய்ய நாங்கள் வருகை தந்துள்ளோம். ஆனால் இது மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். இந்த பகுதியில் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என நாங்களே சுத்தம் செய்து வருகின்றோம். இரண்டு நாட்களில் அனைத்து குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்கும் வகையில் பணிகள் நடைகின்றது.
இந்த மாநாட்டின் நோக்கம் சமூக நீதி தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பாதுகாக்க வேண்டும், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு சர்வே எடுக்க வேண்டும், முதல்வர் உடனே அறிவிக்க வேண்டும் இல்லை என்றால் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்த மாநாட்டில் சிறு பிரச்னை இல்லாமல் வெற்றிகரமாக நடத்த உதவிய தமிழக அரசு, காவல்துறையினருக்கும், ஊடக துறையினருக்கும் நன்றி. இந்த மாநாடு கூட்டணிக்காக நடத்தவில்லை” என்றார்.


