“என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்”- அன்புமணி ராமதாஸ்
என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100 சதவீதம் பொய்யானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே அண்மைக்காலமாக மோதல்போக்கு இருந்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் பலக்கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதற்கிடையில், ராமதாஸ், தமிழகம் முழுவதும் ஒழுங்காக செயல்படாத மற்றும் பாமகவில் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார். அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார். அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவில் நிகழும் மாற்றங்களும், மோதல்களும் பெரும் பேசுபொருளாகியுள்ளன.
இந்நிலையில் சேலம் மல்லமூப்பம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100 சதவீதம் பொய்யானது. கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் மிகுந்த வலியை அமைதியாக தாங்கிக்கொண்டிருக்கிறேன். நாட்டிற்காக எத்தனையோ சாதனைகளை செய்த கட்சி பாமக. களத்தில் இறங்கி பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாமக மாநாடு நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நிச்சயம் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஜி.கே.மணி, அருள் விரைவில் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் ” என்றார்.


