“கேடு கெட்ட திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென்றே அதிமுகவுடன் கூட்டணி! 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம்”- அன்புமணி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், திமுக ஆட்சியைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஆவேசமாக உரையாற்றினார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் திமுகவின் "கேடுகெட்ட" ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனை திமுகவினரே பேசத் தொடங்கிவிட்டனர். மக்கள் நம்பிக்கையுடன் ஸ்டாலினுக்கு வாய்ப்பளித்தார்கள், ஆனால் அந்த நம்பிக்கையை திமுக சிதைத்துவிட்டது. தேர்தல் சமயத்தில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில், இதுவரை வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, மாதாந்திர மின் கட்டண முறை கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக நான்கு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லியே திமுக ஆட்சிக்கு வந்தது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சுமார் 40 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகள் இருக்கும் அவலநிலை நீடிக்கிறது. இளைஞர்களின் கனவுகளைப் பற்றிப் பேசும் அரசு, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், திமுக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதனை நடத்தத் தயங்குவது ஏன்? தேர்தல் பணிக்காக ஒரு மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தும் அரசால், மக்களின் வாழ்வாதாரத்திற்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாதா? இனிவரும் தேர்தல்களில் பட்டியலின மக்கள், வன்னியர்கள் மற்றும் மீனவ சமுதாய மக்கள் என பூர்வகுடி மக்கள் எவரும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்துவிட்ட இந்த ஆட்சியின் காலம் முடிந்துவிட்டது. பாலாற்றில் பாமகவின் போராட்டத்தால் தான் மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டன. அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாகவே இருக்கின்றன. முறையான அரசாணை வரும் வரை அவற்றை நம்ப வேண்டாம்” என்றார்.


