வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வினர் உதவி செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
Updated: Oct 15, 2024, 15:41 IST1728987114042
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பா.ம.க.வினர் உதவி செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை, மதுரை, கோவை என மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக பாதிப்புகளையும், சிரமங்களையும் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இடர்ப்பாட்டுக் காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியின் கடமை. அதன்படி மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இயன்றவரை அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் பா.ம.க.வினர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


