ரூ.500 கோடி மட்டுமே செலவாகும்... திமுக அரசின் சமூகநீதி துரோகம் தொடர்கிறது- அன்புமணி

 
அன்புமணி அன்புமணி


கர்நாடகத்தில் 2-ஆம் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது, தமிழகத்தில் திமுக அரசின் நான்காம் சமூகநீதி துரோகம் தொடர்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

விரைவில் கூட்டணி அறிவிப்பு - அன்புமணி ராமதாஸ் அதிரடி

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் அம்மாநில மக்களின் சமூகநீதியைப் பாதுகாப்பதற்காக கடந்த பத்தாண்டுகளில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இன்று  தொடங்கியுள்ளன. அடுத்த 15 நாள்களில் இந்தப் பணிகளை முடிக்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் சமூகநீதிக்கு எதிரான திமுகவின் துரோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியா என்ற உலகின் மிக அதிக மக்கள்தொகையை கொண்டிருக்கும் நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வுகளும்,  அதன் காரணமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் புறக்கணிப்புகளும் அதிகரித்து வரும் நிலையில்,  இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆகச் சிறந்த ஆய்வு சாதிவாரி கணக்கெடுப்பு தான்  என்பதை பல மாநிலங்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றன. அதன்படி பல மாநிலங்கள் அந்த ஆய்வை மேற்கொண்டு அதனடிப்படையில் சமூகநீதி மருத்துவத்தைச் செய்து சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை 2015&ஆம் ஆண்டில் பெற்ற கர்நாடகம், பத்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் முதல் மாநிலம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. சமூகநீதியைக் காப்பதில் கர்நாடக அரசின் அக்கறை பாராட்டத்தக்கது.

பெங்களூர் நகரம் தவிர மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடங்கியுள்ள இந்த கணக்கெடுப்பை அடுத்த 15 நாள்களுக்குள், அதாவது அக்டோபர் 7&ஆம் தேதிக்குள் முடித்து, அது குறித்த அறிக்கையை  திசம்பர் மாதத்திற்குள் தாக்கல் செய்ய கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தீர்மானித்துள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது ஒவ்வொருவரிடமும் 60 வினாக்கள் எழுப்பப்பட்டு, அவர்களின் சமூக, பொருளாதார, கல்வி வாழ்நிலை குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டு விகிதங்களை உயர்த்துவது உள்ளிட்ட நிகர்நோக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அன்புமணி

இந்த நடவடிக்கைகளின் வாயிலாக பசவண்ணா, தேவராஜ் அர்ஸ், அவானுர் ஆகியோர் தோன்றிய சமூகநீதி மண் என்பதை கர்நாடகம் மீண்டும், மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பெரியார் தோன்றிய மண் என்று போற்றப்படும் தமிழ்நாடு சமூகநீதிப் பயணத்தின் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த பின்னடைவுகள் அனைத்துக்கும் காரணம் தமிழ்நாட்டில் சாதிவாரி  கணக்கெடுப்பு நடத்தி, அதன்வாயிலாக ஒவ்வொரு சமூகத்தின் எண்ணிக்கையும் தெரிந்து விடக்கூடாது என்ற திமுக தலைமையின் அச்சம் தான்.  ஒற்றை நபரின் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் 8 கோடி மக்களின் சமூகநீதி கடந்த 37 ஆண்டுகளாக மீண்டும், மீண்டும் பலி கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 8 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தில் 21 பேர்   உயிர்த்தியாகம் செய்த பிறகு, அது குறித்து முடிவெடுப்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணை  1988&ஆம் ஆண்டு திசம்பர் 12&ஆம் நாள் அன்றைய ஆளுனர் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது.  அதற்கு அடுத்த நாள் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் ஆட்சிக்கு வந்த கலைஞர் செய்த முதல் வேலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையை ரத்து செய்தது தான். அதன்பின் 2010&ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி , இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகையை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனபடி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு அன்றைய முதலமைச்சர் கலைஞரை 27 சமூக அமைப்புகளின் தலைவர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அதை ஏற்று சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்ட கலைஞர், அவரது பதவிக்காலம் முடியும் வரை நடத்தாமல் மாபெரும் துரோகம் செய்தார்.

 வன்னியர் இட ஒதுக்கீடு கோரி 2020&ஆம் ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் எனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, குலசேகரன் ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்காமல் மூன்றாவது முறையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பைத் தட்டிப்பறித்தது. அதைத் தொடர்ந்து பிகார், தெலுங்கானம், ஒதிஷா ஆகிய மாநிலங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள நிலையில், தமிழகமும் சாதிவாரிக்  கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதை ஏற்க மறுத்து நான்காம் முறையாக துரோகம் செய்திருக்கிறது திமுக அரசு. திமுக அரசின் இந்த துரோகத்தை மன்னிக்க தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.

கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் அரசும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து செயல்படுகின்றன. இப்போதும் கூட அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர்  மதுசூதன் நாயக் அளித்த பரிந்துரைப்படி தான் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இப்படி ஒரு பரிந்துரையை அனுப்பலாம் என்ற உணர்வு கூட இல்லாமல் ஆணையம் உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு சமூகநீதி துரோகம் செய்வதில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் சாடிக்கேற்ற மூடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கர்நாடக அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு ரூ.420 கோடி செலவாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்புப் பணியில் மொத்தம் 1.75 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் 2 கோடி குடும்பங்களிடம் விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. இதே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை 8 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் மேற்கொள்ள ரூ.500 கோடி மட்டுமே செலவாகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் தடையில்லை, நிதி தடையில்லை, பணியாளர்கள் தடையில்லை  எனும் நிலையில் ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளது. சமூகநீதிக்கு மீண்டும், மீண்டும் துரோகம் செய்யும் திராவிட மாடல் அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.