மேலும் 37 மீனவர்கள் கைது- நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில், இந்திய அரசு இனியும் பொறுக்கக் கூடாது என பா.ம.க. தலைவர்அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 7-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த இரு வாரங்களுக்குள் ஒரே நேரத்தில் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து நடப்பாண்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 52 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 190 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
மீனவர்களை கைது செய்வது, மீனவர்களைத் தாக்குவது, மீனவர்களின் உடமைகளைக் கொள்ளையடிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என அனைத்து வழிகளிலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை இலங்கை அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. அதனால், பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசின் அட்டகாசமும், அத்துமீறலும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இவை இனியும் தொடர இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.