தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - அன்புமணி கண்டனம்!!

 
pmk

தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கனமழை புயல் காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில்,  நேற்று மீன்வளத் துறையின் அனுமதியை தொடர்ந்து,  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1,800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்ற நிலையில்,  கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் இங்கு  மீன்பிடிக்க கூடாது;  உடனே புறப்பட்டு செல்லுமாறு ராமேஸ்வரம் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.  

fisher

இதனால் மீனவர்கள் கடலில் வீசி இருந்த வலைகள் எடுத்துக் கொண்டு செல்ல புறப்பட இருந்த நிலையில்,  திடீரென இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளது. இதுபோன்று மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. 

Anbumani ramadoss

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், " வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தலைமன்னார் பகுதி மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், பாட்டில்களையும் வீசித் தாக்கியுள்ளனர். சிங்களப் படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்களுக்கு  பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய தாக்குதல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. இதற்கு காரணமான  சிங்களப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! காரைக்கால் முதல் இராமேஸ்வரம் வரையிலான கடல் பரப்பு குறுகியது. அங்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இரு நாட்டு மீனவர்களும்  எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.