நீட் தோல்வி அச்சத்தால் மாணவர் தற்கொலை : விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற அன்புமணி கோரிக்கை!!

 
ttn

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்திவாசன்.  இவர் கடந்த 2019 , 2020 ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதியுள்ளார் . ஆனாலும் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.  இது கடந்த ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்கு காத்திருந்ததாக தெரிகிறது.  இந்த சூழலில் நீட் தேர்வில் இந்த முறையும் தேர்ச்சி பெற முடியாது என்ற மனவேதனையில் இருந்த மாணவன் கீர்த்தி வாசன் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ttn

பள்ளியில் படிக்கும்போது இரண்டாவது மதிப்பெண் வாங்கும் அளவுக்கு சிறந்த மாணவராக இருந்த கீர்த்தி வாசன் நீட் தேர்வு இந்த முறை நடக்காது என்று நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால்  மத்திய அரசு நீட்தேர்வு அறிவித்ததால் அதற்கு தயாராகாமல் இருந்ததுடன்,  மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Anbumani ramadoss

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "பொள்ளாச்சியை அடுத்த முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்! மாணவர் கீர்த்தி வாசன் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இம்முறையும் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோய் விடுமோ? என்ற அச்சம் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது.  மாணவர்களைக் காக்க நீட் ரத்து செய்யப்பட வேண்டும்!நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இன்னும் ஆளுனரின் ஒப்புதலைக் கூட பெறவில்லை. ஆளுனர் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்! நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். இதற்காக தனிக் குழு அமைத்து ஆளுனர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.