மின்கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 19-ஆம் தேதி பாமக போராட்டம்

 
ramadoss

மின்கட்டண உயர்வைக் கண்டித்து மருத்துவர் அன்புமணி தலைமையில் பா.ம.க. 19-ஆம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

PMK: Stalin's rule bereft of achievements

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 4.83 விழுக்காடு, அதாவது   யூனிட்டுக்கு 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இரு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதே அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு குறைந்தது 6% அல்லது அந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம், இவற்றில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்த ஆணைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நான், இனிவரும் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தினேன். அதையும் மீறி தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து  மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.

PMK founder Ramadoss hits out at Tamil Nadu government - The Hindu

பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், அதை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டு மக்களில் 80%க்கும் கூடுதலானவர்கள் அமைப்புசாரா தொழில்களை நம்பியிருப்பவர்கள் ஆவர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், அவர்களின் வருவாய் பணவீக்கத்திற்கு இணையாக உயருவதற்கு வாய்ப்பே இல்லை. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி  உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை. அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு  ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி கடந்த 100 மாதங்களுக்கு மேலாக உயர்த்தப்படவில்லை. இத்தகைய சூழலில் பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது ஏழைகளின்  வாழ்நிலையை அறியாத மன்னர் வாழ்க்கையை வாழும் ஆட்சியாளர்களால் மட்டுமே சாத்தியமானதாகும்.

மின்சாரக் கட்டண உயர்வும், அது அறிவிக்கப்பட்டுள்ள நேரமும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக கருதுகின்றனர் என்பதையே காட்டுகிறது. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்துவதற்கான மின்கட்டண உயர்வை அதற்கு முன்பாகவே அறிவித்திருக்க வேண்டும். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்து அறிவித்திருப்பதிலிருந்தே அவர்களின் வஞ்சகத்தை புரிந்து கொள்ள முடியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இதிலிருந்து தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தப்ப முடியாது.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக் கூடும் என்பதால் அந்தக் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று மே மாதத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் நலனின் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வீடுகளுக்கான 2.18% மின்கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டதைப் போல இப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கலாம்; இல்லாவிட்டால் ஜூன் 10&ஆம் நாள் விக்கிரவாண்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கட்டண உயர்வை அறிவித்திருக்கலாம். ஆனால், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு கட்டண உயர்வை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இம்முறை கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ளாததும், விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு கட்டண உயர்வை அறிவிப்பதும் மக்களை அரசு எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இனியாவது அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

Immediately pay the ₹10-lakh compensation awarded by HC to the Vachathi  survivors: Ramadoss - The Hindu

2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு  ரூ.31,500 கோடி கூடுதல்  வருவாய் கிடைத்தது. 2022-23ஆம் ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதற்கு முன் மின் வாரியம் ஆண்டுக்கு சுமார்  ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022&23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10,000 கோடியாக அதிகரித்தது. 2023&ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், கடந்த ஆண்டும் மின்சார வாரியம் கடும் இழப்பை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. மின்வாரியத்தின் இழப்புக்கு அங்கு நிலவும் ஊழல்களும்,  நிர்வாகச் சீர்கேடுகளும் தான் காரணம் என்பது இதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது. அதை சரி செய்யாமல் மின்கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஓட்டை வாளியில் நீர் பிடிப்பதற்கு ஒப்பான செயல் ஆகும்.

மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மிச்சமாகும் வகையில் மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் 3 முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.15,000 கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலையை  திமுக அரசு உருவாக்கியிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்;  மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19&ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு  சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை  ஏற்பார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட,  ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, கிளை நிர்வாகிகளும், இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் பங்கேற்பர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.