மக்களுக்கு என்ன பதில் சொல்லுவேன்... பதவி விலகல் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை- அருள்
அன்புமணி மற்றும் தரப்பினர் வன்முறையை கைவிட்டு எஸ்.ஐ.ஆர் வாக்கு சேர்த்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என தைலாபுரத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டியளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இணைப்பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள், “வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறவுள்ளது. மருத்துவர் ராமதாசும், அன்புமணியும் இணைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஜிகே.மணி கூறுகிறார். இந்த கருத்தில் நான் மாறுபடுகிறேன். சேலம் மேற்கு, பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். மக்கள் எங்களை வெற்றி பெற்ற வைத்தனர்.
மருத்துவர் ராமதாசுடன், அன்புமணி இனையவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அன்புமணியை இணைய நாங்கள் அழைத்தோம். தந்தை, கட்சியின் நிறுவனர், தலைவர் அழைத்தே வராதவர் நாங்கள் பதவி விலகுவதால் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தேர்தல் ஆணையம் விரைவில் நல்ல முடிவை தருவார்கள். நிர்வாக குழுவில் தலைவராக மருத்துவர் ராமதாசை நிர்வாக குழு தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு அங்கீகரித்தது. இது தான் செல்லும். 12ஆம் தேதி நடைபெறும் போராட்டம் பிசுபிசுக்கும் என எதிர்ப்பார்த்தார்கள். ஆமை போல் மருத்துவர் ராமதாஸ் பணியை ஆரம்பித்தார், தற்போது வெற்றிபெற போகிறோம். அய்யா பாமக என புதிய கட்சி என ஆரம்பித்தது அன்புமணி தரப்பினர். வன்முறையை விடுத்து ஆக்கப்பூர்வமான வேலை பாருங்கள். பொதுக்குழு வழியாக கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.


