ஊழல் குற்றவாளிகளுக்கு வெகுமதி வழங்கும் பெரியார் பல்கலைக்கழகம் - ராமதாஸ் குற்றச்சாட்டு

 
ramadoss

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு மீண்டும் பதவி வழங்குவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல்கள் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகமோ, அரசுக்கே அறைகூவல் விடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு வெகுமதி வழங்கும் செயல்களிலும், ஊழலுக்கான சான்றுகளை அழிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த, திறமையற்ற தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி, ஆட்சிக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், அதே பெரியசாமி சாகித்ய அகாடமி குழுவில் தமிழ்நாட்டில் இருந்து பல்கலைக்கழக பேராளராக அமர்த்தப்பட்டிருக்கிறார். இது கண்டிப்பாக தமிழ்நாடு அரசுக்கு அறைகூவல் விடுக்கும் செயல் தான்.  

ramadoss

அடுத்தக்கட்டமாக, பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்ததாக தமிழக அரசால் பட்டியலிடப்பட்ட 13 குற்றச்சாட்டுகளில் எட்டாவதாக இடம் பெற்றுள்ள மென்பொருள் கொள்முதல் ஊழலில் தொடர்புடைய கணினி அறிவியல் துறையின் தலைவர் தங்கவேல் என்பவரை பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக துணைவேந்தர் அமர்த்தியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரையே, அது குறித்த விசாரணையை ஒருங்கிணைக்கும் பதிவாளராக அமர்த்துவது எந்த வகையில் நீதி? இது பெரியார் பல்கலைக்கழக ஊழல் குறித்த விசாரணையை முற்றிலுமாக முடக்குவதற்கே வழிவகுக்கும். முழுநேர பதிவாளரின் பதவிக்காலமே 3 ஆண்டுகள் மட்டும் தான். ஆனால், தங்கவேல் பொறுப்பு பதிவாளராகவே நான்கரை ஆண்டுகள் இருந்திருக்கிறார். மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார். பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்கவேலுவை விட அனுபவமும், கல்வித்தகுதியும் கொண்ட மூத்த பேராசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை தவிர்த்துவிட்டு, தங்கவேலு பொறுப்பு பதிவாளராக அமர்த்தப்பட்டிருப்பதன் நோக்கம் ஊழல்கள் குறித்த விசாரணையை முடக்குவது தான் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கூறுகின்றனர். அதை புறக்கணித்துவிட முடியாது.  

பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும். அது அதன் இயல்பான முடிவை அடைய வேண்டும் என்றால் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். அதற்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இப்போதைய பொறுப்பு பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். விசாரணைக்குழு புதிய காலக்கெடு வரை காத்திருக்காமல், ஏப்ரல் 12-ந் தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை வழங்குவதையும், அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.