பாமக நிறுவனர் ராமதாஸ் : வாழ்த்திய தலைவர்கள்.. மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்..
இன்று 86 வது பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திருண்டிவனம் அருகே உள்ள கோனேரிகுப்பத்தில் அவரது பிறந்தநால் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அப்போது மருத்துவர் ராமதாஸ் 86 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது அறத்தில் சிறந்தது மரம் நடுவது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ராமதாஸ் அவர்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஐயா அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளுக்காக, 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான, ஐயா திரு ராமதாஸ் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழக மக்கள் மேம்பாட்டிற்காகவும் அயராது உழைத்து வரும் ஐயா திரு. ராமதாஸ் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான ஐயா மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஐயா மருத்துவர் திரு.ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணிகளை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ” என்று வாழ்த்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான், “தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்! பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர்! சமூகநீதிக் காவலர்! தமிழ்க் குடிதாங்கி! பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்! எங்கள் ஐயா! மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், உள்ள நிறைவுடனும் நலமோடு வாழ்ந்து தமிழினத்தின் உரிமைகள் வென்றிட பெருந்துணை புரிந்திட விழைகிறேன்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.



