திட்டமிட்டபடி நாளை பாமக பொதுக்குழு நடைபெறும் - ராமதாஸ் அறிவிப்பு
திட்டமிட்டபடி நாளை பாமகபொதுக்குழு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே இருந்த வந்த மோதல் போக்கு காரணமாக அக்கட்சி மறைமுகமாக இரண்டு அணிகளாகவே செயல்பட்டு வந்தது. கிட்டத்தட்ட இந்த மோதல் பாமகவின் இரு அணிகளை சேர்ந்தவர்களையும் எதிரிகளாக பாவித்து விமர்சித்துகொள்ளும் நிலைக்கு தள்ளியது. மாறி மாறி அறிக்கைகளை வெளியிடுவது, ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்வது, தனித்தனியாக கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என அரசியல் வட்டாரத்தில் சல சலப்பை ஏற்படுத்தி வந்தனர்.

இதனிடையே புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் நாளை சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது திட்டமிட்டபடி நாளை பாமகபொதுக்குழு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். முன்னதாக தமது தாயார் சரஸ்வதி அம்மாள் பிறந்த நாள் விழாவில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றிருந்தார். அப்போது மருத்துவர் ராமதாஸும், அன்புமணியும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், எனது தலைமையில் நாளை திட்டமிட்டபடி புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


