ராமதாஸ்- அன்புமணி இடையே விரைவில் சமரசம்: ஜி.கே.மணி
ராமதாஸ் -அன்புமணி இடையே விரைவில் சமரசம் ஏற்படும் என ஜி.கே.மணி நம்பிக்கை கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் அண்மைக்காலமாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பொதுவெளியில் அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபடியே ராமதாஸ் இருந்து வருகிறார். கட்சியின் நிறுவனரும் நான்தான், தலைவரும் நான் தான் என பேட்டியளித்து வருகிறார். தனியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்த ராமதாஸ், ஒட்டுமொத்தமாக மாவட்ட நிர்வாகிகளை மாற்றியமைத்தார். அன்புமணி சென்னையில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், மருத்துவர் ராமதாஸ் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இவ்வாறாக பாமக உட்கட்சி பூசல் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை அன்புமணி நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, “ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பாமகவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும். அதற்கான தொடக்கமாக இதை பார்க்கலாம். பாமகவில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது” என்றார்.


