விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..!
பாமக தலைமை நிலையம்வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘விழுப்புரம் கிழக்கு மாவட்டம் நல்லாவூரைச் சேர்ந்த வன்னியர் சங்க செயலாளர் ந.ம.கருணாநிதி, சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், 26.07.2024-ம் தேதி முதல் சங்கம் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாமக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “நீக்கப்பட்ட கருணாநிதியின் மகன் மாற்று அரசியல் கட்சி ஒன்றில் பொறுப்பாளராக பதவி வகிக்கிறார். அவர் தனது தந்தையை சந்திக்க வரும் பாமகவினரை தனது கட்சியில் இணைத்து வந்தார். இது தெரிந்தும் கருணாநிதி அதைத் தடுக்கவில்லை. அதனால்தான் இந்த நடவடிக்கை” என்றனர். நீக்கம் குறித்து என்.எம்.கருணாநிதியிடம் கேட்டபோது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் பிரச்சாரத்துக்குப் போகவில்லை. இது குறித்தும் தலைமைக்கு தெரிவித்துவிட்டேன். இருந்தபோதும் என்ன காரணத்துக்காக என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை” என்றார்.