விழுப்புரத்தில் இன்று பாமக போராட்டம்: ‘சமூகநீதியை வென்றெடுப்போம்’ - அன்புமணி
வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக, விழுப்புரத்தில் இன்று பாமக சார்பில் மக்கள் திரள் போராட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1208 நாள்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும். அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20ஆம் நாளான இன்று, இடஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்துகிறோம்.

நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது.
இதை மனதில் கொண்டு இன்று விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், திமுகவின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூகநீதியை வென்றெடுப்போம்.” என்று குறுப்பிட்டுள்ளார்.


