வீரபாண்டி ராஜா மறைவு - ராமதாஸ் இரங்கல்!!

 
PMK

திமுக முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ராஜா மாரடைப்பால் இன்று காலமானதற்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மாரடைப்பால் காலமானார். தனது பிறந்தநாளை ஒட்டி தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திரும்பும் போது  மயங்கி விழுந்த அவர்  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.  இவரது மறைவு அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

veerapandi raja ttn

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "எனது நண்பர் வீரபாண்டியாரின் புதல்வரும், திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளருமான  வீரபாண்டி இராஜா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அரசியலால் வேறுபட்டு இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே வீரபாண்டி இராஜா திகழ்ந்தார். எனது அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும்  கொண்டிருந்தார். அரசியலில் உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். யாருக்கும், எந்தத் தீமையும் நினைக்கக் கூடத் தெரியாதவர். அவரது மறைவு குறித்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

PMK

வீரபாண்டி இராஜாவுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாள் மகிழ்ச்சியாகவும், கனவுகளுடனும் விடிந்திருக்கும். மகிழ்ச்சியும், உற்சாகமும் ஒரு சில மணி நேரங்களில் சோகமாக மாறும் என்பதை  யாரும் எதிர்பார்க்கவில்லை. இராஜா இன்னும் நீண்டகாலம் வாழ்ந்திருக்க வேண்டும். அவரது மறைவு வீரபாண்டியாரின் குடும்பத்திற்கும், சொந்தங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

வீரபாண்டி இராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.