வன்னியர் என்பதால் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கல- ராமதாஸ்
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகி தீரன், மயிலம் எம்.எல் ஏ சிவக்குமார் உள்ளிட்ட பாமகவினர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராமதாஸ், “தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க சொன்னோம், அது எங்கள் வேலை இல்லை மத்திய அரசு வேலை என்கின்றனர். கர்நாடகா, பீகார் , தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கின்றனர். ஏன் நீங்கள் எடுக்கவில்லை, நாங்கள் என்ன கேடு செய்தோம்? வன்னியர் மீது உங்களுக்கு வன்மம்? இந்த மக்களுக்குக்காக 46 ஆண்டுகளாக போராடி வருகிறேன். காந்தி சுதந்திரத்திற்கு 25 ஆண்டு தான் போராடினார், ஆனால் வன்னியர் மக்களுக்காக 45 ஆண்டுகளாக போராடி வருகின்றேன்
வன்னியர் மக்கள் தேர்தல் நேரத்தில் பணத்தை காட்டிய உடனே மயங்கி விடுகின்றனர். ஆனால் வரும் தேர்தலில் அது நடக்காது, 55 ஆண்டுகளாக வன்னியர் மீது இனவெறி உள்ளது. திமுகவை வளர்த்ததே வன்னியர் தான், வன்னியரான துரைமுருகன் பொதுச்செயலாளராக உள்ளார். திமுகவில் இன்றைக்கு அவர் முதல்வர் அல்லது துணை முதல்வராக இருக்க வேண்டும். இன்று பள்ளியில் மாணவர் குடிக்கும் நிலைமை தான் உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பயன்படுத்தி ரூ. 500 கோடி செலவு செய்து ஒரே மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம்.

இடஒதுக்கீடு போராட்டத்தின் போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க அவரின் வீட்டு சமையல்காரர் மூலமாக கூட உங்களை சந்திக்க அனுமதிக்கேட்டேன் என்று நான் ஒரு மணி நேரம் அவரை சந்தித்து பேசியபோது சொன்னேன். எம்.ஜி.ஆர்.க்கு அப்போது கோபம் வந்தது. மந்திரியையும், அதிகாரிகளையும் திட்டினார். இதை ஏன் என்கிட்ட சொல்லல என்று தெத்தி தெத்தி கேட்டார். அப்போது வன்னியர்களுக்கு 13 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறினார். ஆனால் தற்போது 10.5 சதவீதம் தான் கேட்கிறேன்” என்றார்.


