"தற்கொலை செய்துகொள்வேன் என அன்புமணி மிரட்டினார்"- ராமதாஸ்
எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகுந்தனை நியமனம் செய்தேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அழகான ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார்? எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகுந்தனை நியமனம் செய்தேன். அன்புமணி மைக்கை டேபிளில் வீசியது, என் தலையில் வீசியது போல் இருந்தது. அன்புமணியின் செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் இருந்தது. மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு அன்புமணி இருந்தது சரியா?. தனது தாய் சரஸ்வதி மீதே பாட்டிலை எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி. பனையூரில் அலுவலகம் திறந்து இருக்கிறேன் என தொலைபேசி எண்ணை தந்து, நீங்கள் இனி என்னை அங்கு வந்து பார்க்கலாம் என அன்புமணி சொன்னது சரியான செயலா? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்துகொண்டபோதே நான் செத்து போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என நிர்வாகிகளை அன்புமணி தடுத்துவிட்டார்.
அதிமுக - பாமக கூட்டணியே இயற்கையான கூட்டணி, அதுவே வெற்றிக் கூட்டணி. 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைக்க நான் சொன்னதை, அன்புமணி ஏற்கவில்லை. பாஜகவோடு கூட்டணி அமைக்காவிட்டால், தற்கொலை செய்துக்கொள்வேன் என மிரட்டினார். அதிமுக உடன் சென்றிருந்தால், நாங்கள் 3 இடங்களில் வென்றிருப்போம், அவர்கள் 7 இடங்களில் வென்றிருப்பர். ஆனால் பாஜகவோடு கூட்டணி வைக்கவில்லையென்றால், நீங்கள்தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி மிரட்டினார். அவரும், சௌமியாவும் என் காலைப் பிடித்து அழுதனர். என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை. பாஜக உடன் கூட்டணி என்று சௌமியா ஏற்பாடு செய்து விட்டார், வேறு வழி இல்லாமல் சரி என்று சொல்லி விட்டேன்” எனக் குற்றஞ்சாட்டினார்.


