”அன்புமணி என்னை மானபங்கம் செய்துவிட்டார்"- ராமதாஸ்
அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என சவுமியா அழுத்தம் கொடுத்தார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே அண்மைக்கலாமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணி என்னை மானபங்கம் செய்துவிட்டார். என்னை வெளியே தள்ளவும் முயற்சித்தார். தலைமை ஏற்க எனக்கு உரிமையில்லையா என்பதை கேட்கவே எனக்கு அவமானமாக இருக்கிறது. உயிருள்ள என்னை உதாசினம் செய்கிறார்கள். என் கைவிரல்களை கொண்டே, என் கண்ணை குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை உதாசினம் செய்துவிட்டு, என் படத்தை வைத்து உற்சவம் செய்கிறார்கள். மண்டபம் பார்த்து விட்டேன். அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என சவுமியா அழுத்தம் கொடுத்தார். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன. என் குடும்ப பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்று கூறினேன். ஆனால் சவுமியா கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார், 1000 கோயிலுக்கு போயிருப்பார், அந்த கோயில்களில் என்ன வேண்டினார் எனத் தெரியவில்லை.
2019ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்புக்கு டில்லி சென்றபோது அன்புமணி, தான் இனி கட்சியை பாத்துக்கொள்வதாக கூறினார். நான் ஒன்றுமே சொல்லவில்லை. பின் விமானத்தில் அருகில் அமர்ந்து தவறாக சொன்னால் மன்னித்துவிடுங்கள் என்றார். நான் இரு சொட்டு கண்ணீர் விட்டேன். 2026 சட்டப்பேரவை தேர்தல் வரை நான் தலைவர் பதவியில் இருப்பேன். 2026 தேர்தலுக்கு பிறகு கட்சியின் தலைவர் பதவியை அன்புமணி எடுத்துக் கொள்ளட்டும். இதுதான் என் முடிவு. யாருடன் கூட்டணி, வேட்பாளர்கள் யார் என்பதை எல்லாம் நான் பிறகு அறிவிக்கிறேன். ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன். தந்தைக்கு பிறகே தனயன். அய்யாவுக்கு பிறகே அன்புமணி என்பதே எல்லோரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. கட்சி நிர்வாகிகள் என்னை சந்திக்க கூடாது என்கிறார். மாவட்ட நிர்வாகிகளை போனில் அழைத்து என்னை சந்திக்க கூடாது என அன்புமணி கூறியுள்ளார். ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பாமக என்ற மாளிகையில் நான் யாரை குடியமர்த்தினேனோ அவரே வெளியே தள்ளிவிட்டார். என்னை தேடி வந்த அனைவரும் ஒரே விஷத்தையே சொன்னார்கள். எல்லாம் தனக்கே வேண்டும் என அன்புமணி சொல்கிறார். என்னை வீட்டுக்குள் இருந்து பேரன், பேத்திகளோடு விளையாட சொல்கின்றனர். அதனால் நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துவிட்டேன். நான் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும் அன்புமணி அதை நம்பவில்லை. அதன் பிறகே அவருக்கு என்னோடு இருந்த கோபம் வெளிப்பட்டது. 46 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமையேற்க உரிமை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.


