அன்புமணி எனது அரசியல் வாரிசு கிடையாது- ராமதாஸ்
என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அன்புமணியின் செயல்பாடு உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணி எனது அரசியல் வாரிசு கிடையாது.பாமகவை முன்னேற்ற, வலுப்படுத்த அன்புமணி தயாராக இல்லை. உழைப்பதற்கு தயாராக இல்லாத அன்புமணி, கட்சியை வைத்து பணம் சம்பாதிப்பதேயே நோக்கமாக கொண்டிருக்கிறார். என்னை குலசாமி என்று சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார். என்னை நடைப்பிணமாக்கி விட்டு கட்சியை வளர்க்க நடைபயணம் செல்ல இருப்பதாக நாடகமாடுகிறார் அன்புமணி. தைலாபுரம் தோட்டத்தில் எனக்கு தெரியாமலே பாஜகவினருக்கு விருந்து வைத்திருக்கிறார் அன்புமணி. எனது இல்லத்திலேயே 'ஜெய் ஹிந்த்' கோஷம் கேட்கிறது. அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை. பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் தன்னை விமர்சித்த நிர்வாகியை, தனது கையில் துப்பாக்கி இருந்திருந்தால் சுட்டிருப்பார் அன்புமணி.
என் குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்றேன். என் எதிர்ப்பை மீறி தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிட்டார். அரசியலில் வாரிசு என்பதே கிடையாது. அன்புமணியை தலைவராக்க நான் தயாராக இருந்தேன். ஆனால், ஐயா, அன்புமணி, நான் அதை காகிதத்தில் எழுதினாலும் நம்ப மாட்டேன் என்று கூறினார். அப்போதுதான் எனக்குள் இருந்த கோபம் வெளியே வந்தது. அது நீயா நானா என்று நான் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்” என்றார்.


