“என் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான்”- ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் அன்புமணிக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் அன்புமணி தன்னுடைய பெயரை பயன்படுத்த கூடாது எனவும், நானே பாமகவுக்கு தலைவர் என்றும் ராமதாஸ் கூறிவருகிறார். அதேசமயம் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் என்ற பெயரில் 100 நாட்கள் நடைபெறவுள்ள அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுவருகிறார். இதனிடையே ஆக.17ம் தேதி நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அன்புமணியால் போட்டி பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பாமக நான் உருவாக்கிய கட்சி, ஆகவே வேறு யாரும் அதற்கு உரிமை கோர முடியாது. நான் தான் தலைவர். அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம். நான் நியமித்த 100 மாவட்டச் செயலாளர்களை என்னை சந்திக்கவிடாமல் அன்புமணி தடுத்தார். என்னை சந்திக்க வராத 100 பேருக்கு மாற்றாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தேன். எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி ராமதாஸ் தான்” என்றார்.


