சென்னை, கன்னியாகுமரி அருகில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி அளிப்பதா?- ராமதாஸ்
சென்னை, கன்னியாகுமரி அருகில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி அளிப்பதா? உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய எரிசக்தி இயக்குனரகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட 9-ஆம் சுற்று ஏலத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 32485.29 சதுர கிலோமீட்டர் பரப்பளபில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஏலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் கட்டமாக தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமல்ல. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


