"ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டம் வேண்டும்" - ராமதாஸ் கோரிக்கை!!

 
PMK

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

rummy

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூரை  சேர்ந்த பட்டாத்தாள் என்ற 75 வயது மூதாட்டி கடந்த 6ஆம் தேதி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார்.  அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பெரம்பலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சூர்யா என்ற மாணவர் மூதாட்டியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆன்லைன் சூதாட்டத்திற்கும்  ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ramadoss

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய கொடூரம்  இதுவே கடைசியாக இருக்க வேண்டும்! ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகம் இதுவரை நடந்து வந்தது. இப்போது பணத்துக்காக கொலை செய்யும் கொடூர நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கியிருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் இன்னும் கொடிய வடிவம் எடுப்பதை அறிய முடியும்! ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதன் மூலம் தான் தற்கொலைகளையும், இளைய தலைமுறையினரின் சீரழிவையும் தடுக்க முடியும். அதற்காக உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்!ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னேற்றம் இல்லாமல் கிடக்கிறது. அதில் சாதகமான தீர்ப்பும் கிடைக்காது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.