சென்னை ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி! சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!

 
chennai

சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை காண்பதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 44 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் 45வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 6-ம் தேதி  சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்தனர். டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் டிக்கெட் வாங்க குவிந்த சில ரசிகர்கள் அத்துமீறி வரிசையில் நுழைய முயன்ற நிலையில், அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.