பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் சைகை கொடுத்த காவலர்
கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக பெண் பிரமுகரிடம் மதுபோதையில் ஆபாச சைகையில் ஈடுபட்ட காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா கௌரி சங்கர் (39). இவர் அதிமுகவில் 74- வது வட்ட துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் திவ்யா நடந்து முடிந்த மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திருவிக நகர் தொகுதியில் மேயர் பிரியாவை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திவ்யா ஓட்டேரி பாஷியம் தெருவில் அதிமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விட்டு இரவு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வரும் வழியில் உணவகம் ஒன்றில் உணவு வாங்கி திவ்யா பின்னர் அங்கிருந்து ஜமாலியா வழியாக பெரம்பூர் செங்கை சிவம் மேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்னர் தொடர்ந்து வந்த போதை ஆசாமி ஒருவர், அதிக சத்தமாக ஹார் அடித்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதுடன் திவ்யாவை பார்த்து ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே திவ்யா தனது கணவரிடம் இது குறித்து கூறியதால் ஆத்திரமடைந்த கணவர், உடனே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு போதை ஆசாமியிடம் இது குறித்து கேட்ட போது அந்த நபர் தெனாவட்டாக பதில் அளித்துள்ளார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து போதை ஆசாமியை தர்ம அடிக்கொடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் திவ்யா இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அதிமுக பெண் பிரமுகரிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபர் ஓட்டேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் முதல் நிலை காவலர்களாக பணியாற்றி வரும் தினேஷ் (35) என்பதும், இவர் மதுபோதையில் திவ்யாவிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


