அஜித்குமார் கொலை- தவெக போராட்டத்திற்கு அனுமதி
திருபுவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான தவெக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில், திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை சிவானந்தா சாலையில் ஜூலை 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளது, உங்களுக்கு ஏன் அவசரம்? உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? காவல்துறைக்கு அழுத்தும் தரவேண்டாம், அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக கடிதம் தர வேண்டும் எனக் காட்டமாக கூறியிருந்தார். மேலும் காவல்துறைக்கு மீண்டும் மனு அளிக்க வேண்டும், காவல்துறை அந்த மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் திருபுவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு, தவெக அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து காவல்துறை அனுமதி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


