சர்க்கஸ் கூடாரத்தில் ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீஸ் வலைவீச்சு

 
s s

தஞ்சையில்  சர்க்கஸ்  கூடாரத்தில்  ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் வெகு காலமாக தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராக சென்று ஒட்டகம் குதிரை, நாய் உள்ளிட்ட அவற்றைக் கொண்டு சர்க்கஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார். சர்க்கஸ் நடத்துவதற்காக ஒட்டகத்தை வளர்த்து வருகிறார். இந்நிலையில் 15 ம் தேதி கூடாரம் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் பல்வேறு இடங்களில் ஒட்டகத்தை தேடி பார்த்து உள்ளார். ஆனால் ஒட்டகம் கிடைக்கவில்லை. 

உடனே இது குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசில் விஜய் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லை, இதனால் சுற்றுப்பகுதிகள் மற்றும் தஞ்சை நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து ஒட்டகத்தை தேடி வருகின்றனர். 

இதனிடையே ஒட்டகம் இல்லாமல் தங்களால் சர்க்கஸ் நடத்த முடியாமலும், பிழைப்பு நடத்த முடியாமலும் உள்ளதாக கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் விஜய், தங்கள் ஒட்டகத்தை யாரேனும் கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும், ஒட்டகத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.