அர்ஜுன் சம்பத்துக்கு காவல்துறை சம்மன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழப்பட்டி சேர்ந்த சுமதி என்பவர் பால் பண்ணையை நடத்தி வருகிறார். இவரது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இந்த சூழலில் இறந்த கணவனின் சொத்தை பறிப்பது தொடர்பாக அவரது கணவர் குடும்பத்திற்கும், சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சுமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்ரமங்கலம் போலீசார் தீயை அணைத்ததோடு வீட்டிற்குள் மயங்கிய நிலையில், கிடந்த சுமதியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுத்தொடர்பான வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் குண்டு வீச்சு, கள்ளத்துப்பாக்கி, வீச்சருவாள், கத்தி பெருகிவரும் ஆயுத கலாச்சாரம்; சீரழிந்து வாழும் சட்டம் ஒழுங்கு; திமுக ஆட்சியில் அச்சத்தில் மக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மதுரை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அவதூறாக பதிவிட்டதாக அர்ஜுன் சம்பத்துக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பால்பண்ணை உரிமையாளர் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சுபற்றி X பக்கத்தில் அவதூறு பதிவு பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் , இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் நாளை செக்கானுரணி காவல்நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


