தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் கை முறிந்தது..!

 
1

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் டோக்கன் கொடுக்கப்பட்டதால் 7 மணி வரை நடந்தது. அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. அவை சரிசெய்த பின் பொதுமக்கள் வாக்களித்தனர்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை நேதாஜிநகர் 3வது தெருவில் உள்ள வாக்குச்சாவடி எண் 21, 22, 23, 24 ஆகிய பூத்துகளில் பதிவான வாக்குகளை அதிகாரிகள் மூடி சீல் வைத்து வாக்கு பெட்டியை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மணி முருகன் என்பவர், லாரியில் ஏறி வாக்குபெட்டிகளை ஏற்றியுள்ளார். எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் மணி முருகனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு கை முறிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.