அரசியலில் காவிகளாக இருக்கலாம்.. பாவிகளாகத்தான் இருக்கக் கூடாது..! - உதயநிதிக்கு தமிழிசை பதிலடி..
அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து பதைபதைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , வார்த்தைகளை உதிர்க்க தொடங்கிவிட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில் துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் பதற்றமாக உள்ளார். திமுக 4 ஆண்டுகளாக மக்களை சந்திக்காமல் தற்பொழுது வீடு வீடாக சென்று மக்களின் வீட்டு கதவை தட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருக்கிறார். நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி போன்று அமித்ஷா வீட்டு கதவையோ, கமலாலையம் கதவையோ திருட்டுத்தனமாக தட்டவில்லை. மக்களுக்கு செய்த திட்டத்தின் அடிப்படையிலேயே உரிமையோடு தைரியத்தோடு எங்கள் மக்களின் வீட்டு கதவை தட்டுகிறோம்.

திமுகவின் திட்டங்களை கண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எரிச்சல் வருகிறது. பாசிச பாஜகவிற்கும், அடிமை அதிமுகவிற்கும் இடையே ஒற்றுமையில்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவி வருவதாகவும் இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் இரு கட்சிகளாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது. அண்ணாவின் பேரில் கட்சி பெயர் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அமிஷ்தாவிடம் அடமானம் வைக்க பார்க்கிறார். தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி முழு சங்கியாகவே மாறி காவி சாயத்தோடு தமிழ்நாட்டில் உலா வருகிறார். அடிமை பாசிச பாஜகவினர தமிழ்நாட்டிலிருந்து விரட்டப் போவது உறுதி” என்று விமர்சித்திருந்தார்.

உதயநிதியின் இந்தக் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அரசியலில் காவிகளாக இருக்கலாம்; பாவிகளாக இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகத்தின் துணை முதலமைச்சர்.. பாஜக அதிமுக கூட்டணியை பார்த்து... பதைபதைத்து.. சில வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்.. அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காவி சாமியாகிவிட்டார் என்று சொல்லியிருக்கிறார் .. உங்கள் தாத்தா.. காவிய கலைஞராக இருந்தவர்..காவி கலைஞராக மாறினார் என்பதை.. சிறுவனாக இருந்த நீங்கள் மறந்திருப்பீர்கள் ... காவி மாறன் காவி பாலு காவி ராசா...... இப்படி மத்திய அமைச்சர்களாக காவிக்கு தாவியவர்களை நீங்கள் மறந்து விட்டீர்கள்.. மறந்தது போல் நடிக்கிறீர்கள்.. அரசியலில் காவிகளாக இருக்கலாம்.. பாவிகளாகத்தான் இருக்கக் கூடாது...” என்று குறிப்பிட்டுள்ளார்.


