பொங்கல் பரிசு தொகுப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
தமிழர் திருநாளை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் அரிசி வாங்கும் அனைத்து குடும்பு அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசின் சார்பில் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுலதும் மொத்தமுள்ள 2 கோடி 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இப்பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யவிரத சாகு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைப்பெற உள்ளதால், இந்த முறை பொங்பல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கமும் வழங்கப்படும் என்று மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமது பிரச்சாரங்களில் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பை நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.டோக்கன் விநியோகம் முறையாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, பரிசுத் தொகுப்புக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் என்னென்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


