2.22 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

 
பொங்கல் பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்தி 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 248 நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


ஒரு கிலோ பச்சரிசி 25 ரூபாய் விலையில் கொள்முதல் செய்ய 55.72 கோடி, ஒரு கிலோ சர்க்கரை 48 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்ய 108.22 கோடி, ஒரு முழு கரும்பு 38  ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்ய 84 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை கொள்முதல் செய்ய சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களைத் தலைவர்களாக கொண்டும், சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளரை தலைவராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், வேளாண்துறை இணை இயக்குனர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். மேலும், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் / கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் வேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் உறுப்பினராக கொண்ட வட்டார அளவிலான கரும்பு கொள்முதல் குழு மற்றும் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அவர்களால் உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர், வேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் நிலையில் ஒரு அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர் நிலையில் ஒரு அலுவலர் ஆகியோர் கொண்ட கரும்பு கொள்முதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மூலம் அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெறும். குறிப்பாக, கரும்பு அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும். கொள்முதல், போக்குவரத்து மற்றும் விநியோக ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவரது நேரடி கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் கண்காணித்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 அடிக்கு குறைவான பன்னீர் கரும்பு கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கரும்பு தடிமனாகவும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மாவட்ட வாரியாக  இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்து பயன்பெறலாம்.