சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி! எம்.எல்.ஏ. தகுதியை இழக்கிறார்

 
Ponmudi

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்த  சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக டிசம்பர் 21ம் தேதி ஆஜராகும்படி பொன்முடி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, எம்.எல்.ஏ.வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கிறார்.

ponmudi

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த  மேல் முறையீட்டு வழக்கை   நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்சஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட,  39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களைத் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. பொன்முடி தரப்பில், மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும்,  பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக  வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என வாதிட்டார். 

Ponmudi

குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும்  வாதிடப்பட்டது.  அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமான வரிக்கணக்கு அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறு எனவும்,  64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளது எனவும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல் விடுதலை செய்துள்ளதாகக் கூறி, பொன்முடி, அவரது மனைவியை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக டிசம்பர் 21ம் தேதி ஆஜராகும்படி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பின் காரணமாக பொன்முடி, எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார்.