"ஆவின் நிறுவனம் தேய்பிறை போல தேய்ந்து அமாவாசையை நோக்கி..." - பொன்னுசாமி விமர்சனம்!!

 
ponnusamy

ஆவின் நிறுவனம் தேய்பிறை போல தேய்ந்து கொண்டே அமாவாசையை நோக்கி சென்று கொண்டிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பால் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது ஆவின் நிர்வாகம் தமிழகம் முழுவதும் பால் கொள்முதலை குறைக்கச் சொல்லி வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாகவும், அதனால் மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கொள்முதல் நிலையங்களில் பால் குறைந்த அளவே வாங்கப்படுவதாகவும், அதன் காரணமாக தற்போது தனியார் நிறுவனங்களுக்கு பால் வரத்து அதிகரித்துள்ளதால், தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் வரை குறைத்து வாங்குவதாகவும் அவர் கூறிய தகவல் உள்ளபடியே அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

Aavin

ஏனெனில் ஏற்கனவே கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக ஆவினுக்கான பால் கொள்முதல் கடும் சரிவடைந்து அதிலிருந்து ஆவின் நிர்வாகத்தால் மீளமுடியாமல் இருப்பதால் ஆவின் பால் விற்பனையை ஈடுசெய்ய மகராஷ்டிரா ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து வெண்ணெய் மற்றும் பால்பவுடர் கொள்முதல் செய்து அதன் மூலம் பால் உற்பத்தி செய்து விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் பால் கொள்முதலை குறைக்கச் சொல்லி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக வரும் தகவல் இன்னும் கூடுதலாக வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான  வழிகளில் ஆவின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனரோ..? என்கிற சந்தேகம் எழுகிறது.

கடந்த வாரம் தான் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை ஆவினை விட குறைவான விலை கொடுத்து தான் வாங்க வேண்டும், விற்பனை விலையை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகமாக உயர்த்தி விற்பனை செய்து கொள்ளுங்கள் என ஆவின் அதிகாரிகள் தனியார் பால் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக பால் உற்பத்தியாளர்களின் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விற்பனையை அதிகரிக்கவும், நிறுவனத்தை ளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லவும் பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது ஆவின் நிர்வாகமோ அதற்கு நேர் மாறாக தமிழகம் முழுவதும் ஆவின் பாலின் விநியோக அளவை பால் முகவர்களுக்கு குறைத்து, சீலிங் முறை வைத்து  பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்வதும், பச்சை நிற பாக்கெட்டில் வரும் நிலைப்படுத்தப்பட்ட (4.5%கொழுப்பு சத்து) பாலுக்குப் பதிலாக அதே விற்பனை விலை கொண்ட, கொழுப்பு சத்து குறைவான (3.5%கொழுப்பு சத்து) ஊதா நிற பாக்கெட்டைத் தான் வாங்கியாக வேண்டும் என கட்டாயப்படுத்தி வருவதும், இதனால் நுகர்வோராகிய பொதுமக்கள் தனியார் பால் நிறுவனங்களின் பாலிற்கு மாறத் தொடங்கியிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆட்சி மாறினாலும் ஆவினில் காட்சிகள் மாறாத சூழலில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர் மாறினாலாவது விடியல் பிறக்கும் என நம்பியிருந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மாற்றப்பட்டு மாதங்கள் பல கடந்த போதிலும் கூட ஆவின் நிறுவனம் தேய்பிறை போல தேய்ந்து கொண்டே அமாவாசையை நோக்கி சென்று கொண்டிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.