ஆவினுக்கு திண்டாட்டம், தனியாருக்கு கொண்டாட்டம்!!

 
ponnusamy

ஆவின் பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்து விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேட்பதற்கு ஆளில்லை என்றால் ஆவின் நிர்வாகம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் ஆவின் பால் விற்பனை விலையை மறைமுகமாக லிட்டருக்கு 8.00ரூபாய் உயர்த்தும் நோக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகரில் ஊதா நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட "செரிவூட்டப்பட்ட பசும்பால்" விநியோகத்தை நேற்று முதல் (01.10.2023) எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தி விட்டு, தற்போது அதற்குப் பதிலாக "டிலைட் பால்" என்கிற பெயரில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு வரும் அதே ஊதா நிற பால் பாக்கெட் விநியோகத்தை தொடங்கியிருக்கிறது.

மேலும் சென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 4.5%கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை எந்தவிதமான முன்னறவிப்பும் இன்றி 50% குறைத்து விநியோகம் செய்த நிலையில், மொத்த விநியோகஸ்தர்கள் வாயிலாக பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் 4.5%கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தையும் நாளை (அக்டோபர்-3) முதல் 50% குறைக்க முடிவு செய்துள்ளது பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆவின் 4.5%கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருவதோடு, அதிக விலை கொண்ட தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் பால் முகவர்களோ நுகர்வோர் கேட்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளை சரியாக விநியோகம் செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அதுமட்டுமின்றி தற்போது பச்சை நிற, நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றாக விநியோகம் செய்யப்படும் ஊதா நிற பால் பாக்கெட் பின்புறம் Toned Milk (சமன்படுத்தப்பட்ட பால்) என குறிப்பிட்டிருப்பதன் மூலம் பொதுமக்களையும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தையும் ஏமாற்றுகின்ற செயலில் ஆவின் நிர்வாகம் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது.ஏனெனில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளின் படி பசும்பால் (Cow Milk) என்றால் 3.5%கொழுப்பு சத்தும், 8.5%திடசத்தும் இருக்க வேண்டும். அதுவே சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) என்றால் 3.0%கொழுப்பு சத்தும், 8.5%திடசத்தும் இருக்க வேண்டும் என்கிற நிலையில் ஊதா நிற பாக்கெட்டில் "செரிவூட்டப்பட்ட பசும்பால்" என அறிமுகம் செய்து விட்டு, தற்போது அதனை "டிலைட் பால்" என மாற்றியிருப்பதும், ஏற்கனவே நீல நிற பாக்கெட்டில் "Toned Milk" (சமன்படுத்தப்பட்ட பால்) விற்பனையில் இருக்கும் போது தற்போதைய ஊதா நிற பாக்கெட் பின்புறமும் "Toned Milk" என போட்டிருப்பதன் மூலம் ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.

ஏற்கனவே 5%, 10%, 20%என நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைத்து வந்துள்ள ஆவின் நிர்வாகம் தற்போது சென்னை மாநகரில் ஒரேயடியாக 50% குறைத்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக 1% கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டினை விற்பனை செய்து, மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்திட திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது.ஏற்கனவே கடந்த இரண்டாண்டுகளில் 9முறை  ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம், பால் விற்பனை விலையை நேரடியாக உயர்த்த முடியாமல், தற்போது நடைமுறையில் உள்ள பால் பாக்கெட்டுகளின் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு முதல் 8.00ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை செய்து மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காத சூழலில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக ஆவினுக்கான பால் வரத்து கடுமையாக சரிவடைந்ததால் வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்து அதன் மூலம் ஆவின் பால் உற்பத்தி செய்யும் நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய பாலில் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு 8.00ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தி கொண்டிருப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதனால் ஆவின் பால் உபயோகிக்கும் நுகர்வோருக்கும், விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கும் திண்டாட்டமாகவும், ஆவின் அதிகாரிகளுக்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் கொண்டாட்டமாகவும் இருக்கிறது. 

எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிர்வாகத்தின் தன்னிச்சையான, சர்வாதிகாரமான முடிவுகளை தமிழக அரசு இனியேனும் அனுமதிக்காமல், ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அத்துடன் ஆவின் பால் விற்பனை விலையையும் நியாயமான அளவில் மாற்றி அமைத்து, மக்கள் விரும்பி வாங்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்து விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.