அரசு மாதிரிப்பள்ளியில் தரமற்ற உணவு.. புகாருக்கு பின்னும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் - டிடிவி தினகரன் கண்டனம்..

 
ttv ttv

தென்காசியில் மாதிரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதோடு,  பெற்றோர்கள் புகார் அளித்த  பின்பும் அலட்சியமாக செயல்படும் பள்ளி நிர்வாகத்திற்கு   அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம் அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அழுகிய முட்டைகளும், தரமற்ற உணவும் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ வேண்டிய அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற உணவை விநியோகித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

food

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதோடு, அவை தயாரிக்கும் முறையும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம்  பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் தட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, என அடுக்கடுக்கான புகார்களுக்கு உள்ளாகி வரும் அரசுப்பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவும் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பது அப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக இழக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்குவதோடு, அவர்கள் பயிலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.