இளையராஜா மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறைக்கு கடும் கண்டனம் - பூவை ஜெகன் மூர்த்தி!

 
Poovai Jegan Moorthi Poovai Jegan Moorthi

இசைஞானியின் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்த இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. கருவறைக்குள் அனுமதிக்கப்படாமலேயே வாசலில் நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கோயிலின் கருவறைக்குள் நுழைவதற்கு தகுதி வைத்துக் கொள்ளும் பார்ப்பனர்கள், ஏனைய சமூக மக்களை இழிவாக நடத்துவது தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது. தனக்கு அர்ச்சனை செய்வதற்கும், தொட்டு தரிசனம் செய்தவற்கும் பார்ப்பனர்கள் மட்டும் தான் தேவை என கடவுள் கூறியதா.? இத்தகைய சாதிய படிநிலைகளால் உருவாக்கப்பட்ட வழிபாடுகளால் தான் கடவுளே வேண்டாம் என பெரியார் கூறினார். 


சாதி ஒழிய வேண்டுமெனில், இத்தகைய வழிபாட்டு முறைகள் ஒழிக்கப்பட வேண்டும். கடவுள் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டை கூறுபவர்கள், பார்ப்பனர்களின் இந்த சாதிய உருவாக்கம் குறித்து மட்டும் வாய் திறக்க மாட்டார்கள். அப்படி எதிராக பேசுபவர்களையும் சாதிய கட்டமைப்பிற்குள் அடைக்கும் எண்ணத்தில் அனைவரும் உள்ளனர். மேனாள் குடியரசுத்தலைவர் தொடங்கி தொடங்கி இசைஞானி வரை இப்படி சாதியக் கட்டமைப்புகளால் அவமானப்படுத்தப்பட்டோர் ஏராளம் என குறிப்பிட்டுள்ளார்.