நாளை முதல் சனிக்கிழமை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது. சென்னைக்கு வடகிழக்கே சுமார் 90 கி.மீ தொலைவில் ‘மிக்ஜாம்’ புயல் உள்ளது. இது தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து நாளை (டிச.5) முற்பகல் நெல்லூர்- மசூலிபட்டினம் இடையே தீவிர புயலாக கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை (5.12.2023) அன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் நேரடி கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு நடத்தப்படும் எனவும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.


