செம்மொழிப் பூங்கா திறப்பு ஒத்திவைப்பு: கோவை மக்களுக்கு ஏமாற்றம்!
கோவை மாநகரில் 165 ஏக்கர் பரப்பளவில், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 45 ஏக்கரில் 208.50 கோடி ரூபாய் செலவில் இந்தப் பூங்கா உருவாகியுள்ளது. இதில் தாவரவியல் பூங்கா, சூரிய தகடு, சிற்பங்கள், பேட்டரி வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் கொண்டு வருதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் என 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம் போன்ற மரங்களும் இங்கு நடப்பட்டுள்ளன. ரோஜா தோட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
453 கார்கள், 10 பேருந்துகள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்ய நடைபாதைகள், சாலை வசதிகள் உள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்கள் பொருட்கள் விற்க மதி அங்காடியும் அமைக்கப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் உள்ளது.
பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் பூங்கா கடந்த 25 ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


